ரமண மகரிஷி அருளிய நூல்
(நான் யார் ?)
யோக விளக்கவுரை திருஞான தேசிகன் சிவயோகி
📖 நான் யார் ❓ (Who Am I) ❓ 📖 PART – 2
1️⃣0️⃣ மனம் எப்படி யடங்கும்?
📖 நான் யாரென்னும் விசாரணையினாலேயே மனமடங்கும்;
📖 நான் யாரென்னும் நினைவு மற்ற நினைவுகளையெல்லா மழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானு மழியும்.
📖 பிறகு சொரூபதரிசன முண்டாம்.
1️⃣1️⃣ நான் யா ரென்கிற நினைவை சதா காலமும் பிடிக்கும் உபாயம் என்ன?
📖 பிற வெண்ணங்க ளெழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் அவை “யாருக் குண்டாயின”? என்று விசாரிக்க வேண்டும்.
📖 எத்தனை எண்ணங்க ளெழினு மென்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வோ ரெண்ணமும் கிளம்பும்போதே “இது யாருக்குண்டாயிற்று?” என்று விசாரித்தால் “எனக்கு” என்று தோன்றும்.
📖 “நான் யார்” என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும்;
📖 எழுந்த வெண்ணமு மடங்கி விடும். இப்படிப் பழகப் பழக மனதிற்குத் தன் பிறப்பிடத்திற் றங்கி நிற்கும் சக்தியதிகரிக்கின்றது.
📖 சூக்ஷ்மமான மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாய் வெளிப்படும்போது ஸ்தூலமான நாம ரூபங்கள் தோன்றுகின்றன;
📖 ஹ்ருதயத்தில் தங்கும்போது நாம ரூபங்கள் மறைகின்றன.
📖 மனத்தை வெளிவிடாமல் ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம் அல்லது அந்தர்முகம் என்று பெயர்.
📖 வெளியிடுவதற்குத்தான் பகிர்முக மென்று பெயர்.
📖 இவ்விதமாக மனம் ஹ்ருதயத்திற் றங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான நான் என்பது போய், எப்பொழுது முள்ள தான் மாத்திரம் விளங்கும்.
📖 எதைச் செய்தாலும் நான் என்கிற அகங்கார மற்றுச் செய்ய வேண்டும்.
📖 அப்படிச் செய்தால் எல்லாம் சிவ ஸ்வரூபமாய்த் தோன்றும்.
1️⃣2️⃣ மன மடங்குவதற்கு வேறு உபாயங்க ளில்லையா?
📖 விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை.
📖 மற்ற உபாயங்களினால் அடக்கினால், மன மடங்கினாற்போ லிருந்து மறுபடியும் கிளம்பிவிடும்.
📖 பிராணாயாமத்தாலும் மன மடங்கும்;
📖 ஆனால் பிராண னடங்கியிருக்கும் வரையில் மனமு மடங்கியிருந்து,
📖 பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தா யலையும்.
📖 மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிட மொன்றே.
📖 நினைவே மனதின் சொரூபம்;
📖 நான் என்னும் நினைவே மனதின் முதல் நினைவு;
📖 அதுவே யகங்காரம்.
📖 அகங்கார மெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது,
📖 ஆகையால் மன மடங்கும்போது பிராணனும், பிராண னடங்கும்போது மனமு மடங்கும்.
📖 ஆனால் சுழுத்தியில் மன மடங்கி யிருந்தபோதிலும் பிராண னடங்கவில்லை.
📖 தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும், தேகமானது மரித்து விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது.
📖 ஜாக்கிரத்திலும் சமாதியிலும் மன மடங்குகிறபோது பிராண னடங்குகிறது.
📖 பிராணன் மனதின் ஸ்தூல ரூபமெனப்படும்.
📖 மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து,
📖 உடல் மரிக்குங் காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது.
📖 ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமேயன்றி மனோநாசஞ் செய்யாது.
📖 பிரணாயாமம் போலவே மூர்த்தித் தியானம், மந்திர ஜபம், ஆகார நியம மென்பவைகளும் மனத்தை அடக்கும் சகாயங்களே.
📖 மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை யடைகிறது.
📖 மனமானது சதா சலித்துக் கொண்டே யிருக்கும்.
📖 யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றம லதையே பற்றிக் கொண்டு செல்லுமோ,
📖 அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக் கொண்டிருக்கும்.
📖 மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்ற படியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது.
📖 நினைவுக ளடங்க வடங்க ஏகாககிரத் தன்மை யடைந்து,
📖 அதனாற் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.
📖 எல்லா நியமங்களினுஞ் சிறந்த மித சாத்வீக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி ஆத்மவிசாரத்திற்கு சகாய முண்டாகிறது.
1️⃣3️⃣ விஷயவாசனை (நினைவு)கள் அளவற்றனவாய்க்கடலில் அலைபோலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?
📖 சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவுகளெல்லாம் அழிந்துவிடும்.
1️⃣4️⃣ தொன்றுதொட்டு வருகின்ற சகல விஷயவாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்கமுடியுமா?
📖 ‘முடியுமா, முடியாதா?’ வென்கிற சந்தேக நினைவுக்கு மிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப் பிடிக்க வேண்டும்.
📖 ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும்,
📖 ‘நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப்போகிறேன்?’ என் றேங்கி அழுது கொண்டிராமல்,
📖 தான் பாபிஎன்னு மெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்தி
📖 லூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான்.
📖 நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை;
📖 மன மொன்றே.
📖 வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம்.
📖 மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும்,
📖 அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்டமன மென்றும் சொல்லப்படும்.
📖 பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது.
📖 பிறர் எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது.
📖 விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன.
📖 பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான்.
📖 இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்?
📖 தானெழுந்தால் சகலமும் எழும்;
📖 தானடங்கினால் சகலமு மடங்கும்.
📖 எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ,
📖 அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு.
📖 மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.
1️⃣5️⃣ விசாரணை எதுவரையில் வேண்டும்?
📖 மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும் விசாரணையும் வேண்டும்.
📖 நினைவுகள் தோன்றத்தோன்ற அப்போதைக்கப்போதே அவற்றை யெல்லாம் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும்.
📖 ஒருவன் சொரூபத்தை யடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின்,
📖 அது வொன்றே போதும்.
📖 கோட்டைக்குள் எதிரிகளுள்ள வரையில் அதிலிருந்து வெளியே வந்துகொண் டிருப்பார்கள்;
📖 வரவர அவர்களை யெல்லாம் வெட்டிக் கொண்டே யிருந்தால் கோட்டை கைவசப்படும்.
1️⃣6️⃣ சொரூபத்தின் இயல்பு என்ன?
📖 யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே.
📖 ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதிற் கற்பனைகள்;
📖 இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றன.
📖 நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத விடமே சொரூபமாகும்.
📖 அதுவே மௌன மெனப்படும்.
📖 சொரூபமே ஜகம்;
📖 சொரூபமே நான்;
📖 சொரூபமே ஈச்வரன்;
📖 எல்லாம் சிவ சொரூபமே.
1️⃣7️⃣ எல்லாம் ஈசன் செயலன்றோ?
📖 இச்சா ஸங்கல்ப யத்தன மின்றி யெழுந்த ஆதித்தன் சன்னிதி மாத்திரத்தில் காந்தக்கல் அக்கினியைக் கக்குவதும்,
📖 தாமரை யலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தங் காரியங்களிற் பிரவிருத்தித்து இயற்றி யடங்குவதும்,
📖 காந்தத்தின் முன் ஊசி சேஷ்டிப்பதும்போல,
📖 ஈசன் சன்னிதான விசேஷ மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது பஞ்ச
📖 கிருத்தியங்கட் குட்பட்ட ஜீவர்கள் தத்தம் கர்மானுசாரம்சேஷ்டித் தடங்குகின்றனர்.
📖 அன்றி, அவர் சங்கல்ப ஸஹித ரல்லர்;
📖 ஒரு கருமமும் அவரை யொட்டாது.
📖 அது, லோககர்மங்கள் சூரியனை யொட்டாததும்,
📖 ஏனைய சதுர் பூதங்களின் குணா குணங்கள் வியாபகமான ஆகாயத்தை யொட்டாததும் போலும்.
1️⃣8️⃣ பக்தருள் மேலான பக்தர் யார்?
📖 எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.
📖 ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று மிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
📖 ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார்.
📖 சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால்,
📖 நாமு மதற் கடங்கி யிராமல், “இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு”மென்று சதா சிந்திப்பதேன்?
📖 புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற்போட்டுவிட்டுச் சுகமா யிராமல்,
📖 அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post