ரமண மகரிஷி அருளிய நூல்
(நான் யார் ?)
யோக விளக்கவுரை திருஞான தேசிகன் சிவயோகி
📖 நான் யார் ❓ (Who Am I) ❓ 📖 PART – 3
1️⃣8️⃣ பக்தருள் மேலான பக்தர் யார்?
📖 எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.
📖 ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று மிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
📖 ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார்.
📖 சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால்,
📖 நாமு மதற் கடங்கி யிராமல், “இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு”மென்று சதா சிந்திப்பதேன்?
📖 புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற்போட்டுவிட்டுச் சுகமா யிராமல்,
📖 அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?
1️⃣9️⃣ வைராக்கியமாவது எது?
📖 எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம்.
📖 முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்களோ,
📖 அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ளாழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.
2️⃣0️⃣ கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?
📖 கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல்,
📖 தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார்.
📖 கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர்.
📖 புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ,
📖 அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்;
📖 எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தியடைய வேண்டும்.
📖 தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால், தானே யறியவேண்டுமே யல்லாமல்,
📖 பிறராலெப்படி யறியலாம்?
📖 ராமனென்பவன் தன்னை ராமனென்றறிவதற்குக் கண்ணாடி வேண்டுமோ?
2️⃣1️⃣ முக்தியில் விருப்ப முள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமா?
📖 குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை யாராய்வதா லெப்படிப் பயனில்லையோ,
📖 அப்படியே தன்னையறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்க ளனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல்.
📖 அவை இத்தனை யென்று கணக்கிடுவதாலும்,
📖 அவற்றின் குணங்களை யாராய்வதாலும் பயனில்லை.
📖 பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போ லெண்ணிக் கொள்ள வேண்டும்.
2️⃣2️⃣ நனவிற்கும், கனவிற்கும் பேதமில்லையா?
📖 நனவு (ஜாக்ரம்) தீர்க்கம், கனவு (சொப்பனம்) க்ஷணிக மென்பது தவிர வேறு பேத மில்லை.
📖 ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ,
📖 அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன.
📖 சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது.
📖 ஜாக்ரம் சொப்பன மிரண்டிலும், நினைவுகளும் நாமரூபங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.
2️⃣3️⃣ முமுக்ஷுக்களுக்கு நூற்படிப்பால் பிரயோஜன முண்டா?
📖 எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால்,
📖 மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதாற் பயனில்லை.
📖 மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் விசாரிக்க வேண்டுமே யல்லாமல்,
📖 எப்படி நூல்களில் விசாரிப்பது?
📖 தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணாற் றானே யறிய வேண்டும்.
📖 ‘தான்’ பஞ்ச கோசங்களுக்குள்ளிருப்பது ;
📖 நூல்களோ அவற்றிற்கு வெளியி லிருப்பவை.
📖 ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே.
கற்றவை யனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.
2️⃣4️⃣ சுகமாவது யாது?
📖 சுக மென்பது ஆத்மாவின் சொரூபமே;
📖 சுகமும் ஆத்ம சொரூபமும் வேறன்று.
📖 பிரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுகமென்பது கிடையாது.
📖 அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம்.
📖 மனம் வெளி வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது.
📖 உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போ தெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது.
📖 அப்படியே, தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிறபோதும்,
📖 வெறுத்த பொருளுக்குக் கேடுண்டாகும்போதும்,
📖 மனம் அந்தர்முகமாகி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது.
📖 இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது.
📖 மரத்தடியில் நிழல் சுகமா யிருக்கிறது.
📖 வெளியில் சூரிய வெப்பம் கொடுமையா யிருக்கிறது.
📖 வெளியி லலையு மொருவன் நிழலிற் சென்று குளிர்ச்சி யடைகிறான்.
📖 சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக் காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான்.
📖 இவ்வாறு நிழலினின்று வெயிலிற்போவதும்,
📖 வெயிலினின்று நிழலிற் செல்வதுமாயிருக்கிறான்.
📖 இப்படிச் செய்கிறவன் அவிவேகி.
📖 ஆனால் விவேகியோ நிழலை விட்டு நீங்கான்.
📖 அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை.
📖 ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தி லுழன்று துக்கப்படுவதும்,
📖 சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுக மடைவதுமா யிருக்கிறது.
📖 ஜக மென்பது நினைவே.
📖 ஜகம் மறையும்போது, அதாவது நினைவற்ற போது, மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றது;
📖 ஜகம் தோன்றும் போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.
2️⃣5️⃣ ஞானதிருஷ்டி என்றால் என்ன?
📖 சும்மா விருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர்.
📖 சும்மா விருப்பதாவது, மனத்தை ஆத்ம சொரூபத்தில்லயிக்கச் செய்வதே;
📖 அன்றி பிறர் கருத்தறிதல்,
📖 முக்கால முணர்தல்,
📖 தூர தேசத்தில் நடப்பன வறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டி யாகமாட்டா.
2️⃣6️⃣ நிராசைக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமென்ன?
📖 நிராசையே ஞானம்.
📖 நிராசை வேறு ஞானம் வேறன்று;
📖 உண்மையில் இரண்டு மொன்றே.
📖 நிராசை யென்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது.
📖 ஞான மென்பது ஒரு பொருளும் தோன்றா திருப்பது.
📖 என்றால், அன்னியத்தை நாடா திருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை;
📖 தன்னை விடாதிருத்தல் ஞானம்.
2️⃣7️⃣ விசாரணைக்கும் தியானத்திற்கும் பேதமென்ன?
📖 விசாரணையாவது தன்னிடத்திலேயே மனதை வைத்துக் கொண்டிருப்பது.
📖 தியானமாவது தன்னை பிரம்ம மென்றும் சச்சிதானந்த மென்றும் பாவிப்பது.
2️⃣8️⃣ முக்தி யென்றா லென்ன?
📖 பந்தத்தி லிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JUNE 2025