ரமண மகரிஷி அருளிய நூல்
(நான் யார் ?)
யோக விளக்கவுரை திருஞான தேசிகன் சிவயோகி
📖 நான் யார் ❓ (Who Am I) ❓ 📖 PART – 1
📖 சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும்,
📖 யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும்,
📖 பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும்,
📖 மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை யடையத்தன்னைத் தானறிதல் வேண்டும்.
📖 அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.
1️⃣ நான் யார் ?
📖 ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று.
📖 சப்த,ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்ஷுஸ், ஜிஹ்வை,கிராணமென்கிற ஞானேந்திரியங்க ளைந்தும் நானன்று.
📖 வசனம், கமனம், தானம், மல விஸர்ஜ்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்க ளைந்தும் நானன்று.
📖 சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. நினைக்கின்ற மனமும் நானன்று.
📖 சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களுமற்று, விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று.
2️⃣ இவையெல்லாம் நானல்லாவிடில் பின்னர் நான் யார் ?
📖 மேற்சொல்லிய யாவும் நானல்ல வென்று ‘நேதி’ செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.
3️⃣ அறிவின் சொரூப மென்ன ?
📖 அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.
4️⃣ சொரூப தரிசனம் எப்போது கிடைக்கும் ?
📖 திருசியமாகிய ஜகம் நீங்கிய விடத்துத் திருக்காகிய சொரூப தரிசன முண்டாகும்.
5️⃣ ஜகமுள்ள (தோன்றுகின்ற) போதே சொரூப தரிசன முண்டாகாதா ?
📖 உண்டாகாது.
6️⃣ ஏன் ?
📖 (திருக்கும் – திருசியமும்), (ரஜ்ஜுவும் – சர்ப்பமும்) போன்றவை.
📖 கற்பித சர்ப்பஞானம் போனா லொழிய அதிஷ்டான ரஜ்ஜுஞானம் உண்டாகாதது போல, கற்பிதமான ஜகதிருஷ்டி நீங்கினாலொழிய அதிஷ்டான சொரூப தரிசன முண்டாகாது.
7️⃣ திருசிய மாகிய ஜகம் எப்போது நீங்கும் ?
📖 சர்வ அறிவிற்கும் சர்வ தொழிற்கும் காரண மாகிய மனம் அடங்கினால் ஜகம் மறையும்.
8️⃣ மனதின் சொரூப மென்ன ?
📖 மனம் என்பது ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசயசக்தி.
📖 அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது.
📖 நினைவுகளை யெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மன மென்றோர் பொருளில்லை;
📖 ஆகையால் நினைவே மனதின் சொரூபம்.
📖 நினைவுகளைத் தவிர்த்து ஜகமென்றோர் பொருள் அன்னியமா யில்லை;
📖 தூக்கத்தில்நினைவுகளில்லை, ஜகமுமில்லை;
📖 ஜாக்ர சொப்பனங்களில் நினைவுகளுள, ஜகமும் உண்டு.
📖 சிலந்திப் பூச்சி எப்படித்தன்னிடமிருந்து, வெளியில் நூலைநூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்ளுகிறதோ,
📖 அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்ளுகிறது.
📖 மனம் ஆத்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும்.
📖 ஆகையால், ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது;
📖 சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம் தோன்றாது;
📖 மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும்.
📖 தான் என்பது ஆத்மசொரூபமே.
📖 மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும்;
📖 தனியாய்நிற்காது.
📖 மனமே சூக்ஷ்மசரீர மென்றும் ஜீவ னென்றும் சொல்லப்படுகிறது.
9️⃣ மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன?
📖 இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவ தெதுவோ அஃதே மனமாம்.
📖 நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்தவிடத்திற் றோன்றுகிற தென்று விசாரித்தால்,
📖 ஹ்ருதயத்தி லென்று தெரிய வரும்.
📖 அதுவே மனதின் பிறப்பிடம்.
📖 நான், நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்திற் கொண்டுபோய் விட்டுவிடும்.
📖 மனதில் தோன்றும் நினைவுகளெல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு.
📖 இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன.
📖 தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன;
📖 தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.
1️⃣0️⃣ மனம் எப்படி யடங்கும்?
📖 நான் யாரென்னும் விசாரணையினாலேயே மனமடங்கும்;
📖 நான் யாரென்னும் நினைவு மற்ற நினைவுகளையெல்லா மழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானு மழியும்.
📖 பிறகு சொரூபதரிசன முண்டாம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post