திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0901) 📖
செனித்திடுகற் பக்கூறு தீட்சை சொன்னேன்
சிவசத்தி யதுகூறு செயலுஞ் சொன்னேன்
வனிதையெனும் வழக்கூறு செயநீர் சொன்னேன்
வடிவான முப்பூவின் மார்க்கஞ் சொன்னேன்
புனிதமெனுந் திராவகமுங் கற்பஞ் சொன்னேன்
பூபதியுஞ் செந்தூரப் போக்குஞ் சொன்னேன்
வினிதமெனுங் காயசித்தி வேதை சொன்னேன்
விதரணையா யிந்நூலில் விளங்கி னேனே.
📖 பாடல் எண்: (0902) 📖
அண்டரெனு முனிவர்களு மகிழ்ந்து போற்றும்
அணிஞான வெட்டியா யிரத்தைந் நூறும்
எண்டிசையு வானமுத லிடங்கொள் ளாத
இயல்பெல்லாம் பாடுகிறே னினிதான் காணும்
விண்டபொருள் பிராணாய வாசி யோகம்
வெளிகடந்து முப்பாழுத் தாண்டி மேலால்
கண்டிதமா யானருளப் பதினெண் பேரும்
கருணைமகிழ்ந் தனுக்கிரகங் கருதி னாரே.
📖 பாடல் எண்: (0903) 📖
சிரஞ்சீவிப் பதம்பெறவுந் தெளிந்தேன் காணும்
செனகாதி முனிவர்களின் செய்கை யாலும்
மறைத்துவைத்த புதைபொருளை மறைவில் லாமல்
வாசனிக்க அம்பிகைப்பெண் வாழ்த்தி யென்னை
யிறப்பிறப்பு மினிக்கடந்து விருளுந் தாண்டி
இகபரத்தைக் காணவிடை கலையின் மாறித்
துரைப்பெண்ணு மமிர்தவடி வான சோதி
சூக்ஷசுகா தீதமெனக் குரைத்தா ளாண்டே.
📖 பாடல் எண்: (0904) 📖
மாயாம லிருப்பதுவு ஞான வாழ்க்கை
மகத்துகளாய்ச் செனிப்பதுவும் யோக வாழ்க்கை
தாயான அம்பிகையின் கமலம் போற்றித்
தற்பரைக்குள் நின்றிலங்குஞ் சார காரம்
காயாதி கற்பமுண்டு கருணை ஞானக்
கடல்வாரி யமுரியுண்டு கருத்தும் பெற்றால்
நாயினுங் கடைகெட்டு நமனு மாண்டான்
நரகமென்ன சொர்க்கமென்ன நாத விந்தே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0905) 📖
நாதவிந்து யானறிந்து நாடியுட லாவியொன்றாய்க்
காதல்கொண்டு ஞானகற்பக் காயசித்தி யால்தெளிந்தேன்
சூதமென்ன சுக்கிலங்காண் சுரோணிதமி ரண்டளவால்
வாதவித்தை யெய்தும்வகை யாறுதன்னைக் கண்டேனே.
📖 பாடல் எண்: (0906) 📖
வேதரச பானமுண்டு மேவியொரு நாள்பிசகாச்
சாதனைமால் தேவியெனுந் தற்பரையை யான்பணிந்தேன்
தாதுவிந்து நாதமுடல் தன்னையறிந் தேதனித்தேன்
பேதமில்லா வாசிகொண்டு பின்புகலி தீர்ந்தேனே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0907) 📖
சோதிப் பிரகாச மலர்சூடி ஞானந் துலங்குரத்னம்
போதித்த கத்தியன் பொற்பத மேவிப் புகழ்பெறயான்
ஓதத் தலைகடல் மதுரசஞ் சீவியுண்ட பலன்
சாதித் ததுஞான பிராணாய வாசி தனையறிந்தே.
📖 பாடல் எண்: (0908) 📖
பூசித்து ஞான பரிபூர ணானந்த பொற்கமலம்
ரேசித்தும் பூரகம் கும்பத்தில் வாசி நிலைபெறவும்
நாசிக்கு நேரிரு வாசிப் பிரகாச நாட்டத்திலும்
தேசிகன் சேவடி பாதார விந்தந் தெரிசித்தேனே.
வெண்பா
📖 பாடல் எண்: (0909) 📖
அஞ்சு பஞ்ச பூத மறிந்தா லநித்தியம்போம்
அஞ்சும் வசப்படுவ தாண்டதனில்- அஞ்சும்
கண்டறிவோர் ஞானக் கடாக்ஷ மதில் நினைவு
விண்டறிய லாமோ விதி.
📖 பாடல் எண்: (0910) 📖
எண்சாணு தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாயல் நீக்கிப் பேரின்பம்- எண் சாண்
தேகமழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி பூசைவிதி யுண்மை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣0️⃣ ஞானவெட்டியான் (911-927) 👈