திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0888) 📖
நற்பிறவி யாயிருந்து நாள்தோறு ஞானமொழி
கற்பனையால் கண்டறிந்து காலமது போக்காமல்
உற்பகமாய்க் கற்பமதி னுட்கருவி னாலுமறி
தற்பரசி காமணியாய்த் தாரணியில் வாழ்வாரே.
📖 பாடல் எண்: (0889) 📖
அண்டபற்ப முண்டுவர ஆக்கைதனி லுள்ளவினை
உண்டகற்ப நாலாண்டி லூழ்வினைவந் தெய்திடினும்
கண்டனனு போகமதாய்க் கன்மவினை சூழ்ந்திடினும்
சண்டனது வாய்லபிக்குஞ் சார்வது மறிந்திலரே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0890) 📖
வித்தால்விளையு மெய்வாழ்க்கை யென்று மிகமகிழ்ந்தேன்
சத்தாகி லுஞ்சளை யாமலுங் கற்பஞ் சாதித்துயான்
எத்தாக வுண்டு இருந்தாண்டு நாலு மினிக்கடந்து
குற்றம தாக வூழ்வினை வந்து குடிகொண்டதே.
📖 பாடல் எண்: (0891) 📖
என்னுக்கு ளம்பிகை பாதார விந்த மினிபணிய
வின்னம் வராம லூழ்வினை யோடி வெளிப்படுங்காண்
அன்னைவா லாம்பிகை அவிழ்தத் தினால்பிணி யறுவிடச்
சொன்னார் வயித்திய சூட்சச் சூடாமணி சூழ்தில்லையே.
வெண்பா
📖 பாடல் எண்: (0892) 📖
இந்த ஜெனன மிருவினைக் கீடாக
வந்துதித்த மார்க்க வல்வினைகாண்- இந்த
அவிழ்தத்தி னாலறுமே ஆக்கை யதுக்குமொரு
தவமதுநாள் முன்செய்த சாந்தி.
📖 பாடல் எண்: (0893) 📖
கற்பத்தினா லுதித்த கர்ம வினையதுவுஞ்
சொற்பதத்தி னாலொழியச் சொல்லுவேன்- உற்பத்தி
மதிபிசகா துண்டக்கால் வல்பிணியு நோயகலும்
அதிவிதமாங் கற்பத்தா லறி.
விருத்தம்
📖 பாடல் எண்: (0894) 📖
ஆதியாய் விளங்கு ஞான வெட்டியா யிரத்தைஞ் நூறும்
நீதியாம் நிகழ்த்த வாலை நிர்மலத் தாளைப் போற்றிச்
சோதியா னந்த ரூபன் சுயகுறு முனியின் பாதம்
வேதியன் மொழிய ஞான மெய்க்குரு விளங்கத் தானே.
📖 பாடல் எண்: (0895) 📖
மானமும் புவியு மேரும் வாருதி யனுக்கிர கத்தால்
தேனெனு மொழியி னாளே திங்களு மருக்க னாலும்
ஞானம்வந் தமைந்த போது நாதவிந் தருளாலெய்தும்
கானெனுஞ் சூத வித்தை கைவச மாச்சு தாண்டே.
📖 பாடல் எண்: (0896) 📖
வேதியர் குலத்தில் யானும் வந்துதித் தளவை யெல்லாம்
சாதியென் பரைக்குள் வந்த சங்கடமெல்லாஞ்சொன்னேன்
சோதியா னந்த ஞானச் சுழிமுனை நடனங் கண்டு
நாதவிந் துதித்த சூக்ஷ ரகசிய மறிந்தே னாண்டே.
📖 பாடல் எண்: (0897) 📖
அனாதியாய் வெளியாய் நின்ற அரூபத்தை யறிந்தவாறும்
வினாடியான் பிரியா வின்பம் விந்துநின் றுணர்ந்த வாறும்
பணாமுடி மயிர்ப்பா லத்தில் பழம்பொருள் தெளிந்தவாறும்
கனவுபோல் கண்ட காட்சி கற்பத்தா லறிந்தே னாண்டே.
📖 பாடல் எண்: (0898) 📖
அன்னைதந்தை கருவுதனி லுதித்த வாறும்
அகிலமதில் யான்பிறந்து வளர்ந்த வாறும்
சின்னவய தளவில்கல்வி கற்ற வாறும்
தெளிந்துலகத் தோர்களுடன் சேர்ந்த வாறும்
நன்னயமாய்ச் சற்குருவை யடுத்த வாறும்
நம்பிசிவ பூசைதனில் நயந்த வாறும்
இந்நூல்மொ ழியாயிரத் தைந்நூ றுக்குள்
நேர்மையெல்லா மொவ்வொன்றாய் நிகழ்த்துவேனே.
📖 பாடல் எண்: (0899) 📖
அண்டபிண்டப் பிறந்தவர லாறுஞ் சொன்னேன்
அகண்டசத்த தீவுகளு மேருஞ் சொன்னேன்
மண்டலஞ்சூழ் வாரிமதி ரவியுஞ் சொன்னேன்
வாரமுதல் கிரகஉச்ச மாறல் சொன்னேன்
கண்டநக்ஷத்திரமதுவுங் கருவூர் நாடு
கருதொண்ணூற் றாறுஞ்சுட்ட
கருத்துஞ்சொன்னேன்
எண்டிசை மஷ்டகுல வெற்புஞ் சொன்னேன்
எம்பிரான் வளமெல்லா மியம்பி னேனே.
📖 பாடல் எண்: (0900) 📖
நால்வகைக்கு ளெழுவகையு நவின்ற வாறும்
நாதவிந்தால் ஜெகம்படைத்த நாதன் வாறும்
தூலவுடல் சூக்ஷமதால் தொகுத்த வாறும்
தொல்லுலகில் சாதிகுலந் தோன்றும் வாறும்
சீலமுடன் பரைக்குள்வந்து செனித்த வாறும்
சிவகுருக டாக்ஷமதால் தெளிந்த வாறும்
பாலமதில் விழிபடைத்த அண்ண லார்தம்
பார்வையினால் யானறிந்து சொல்வே னாண்டே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣9️⃣ ஞானவெட்டியான் (901-910) 👈