திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0767) 📖
கற்பமிது அற்பமல்ல காயகற்பங் காலைரவி
உற்பகமூன் றாகுமுக்கா லுடன்கடிகைசென்றதின்பின்
விற்பனைகொண் டன்னைமிக வேதனைவாராதிடிலும்
நிற்பவயி ராக்கியத்தில் நின்றுகடை யேறினனே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0768) 📖
வேதாகமத்தில் மறைசூழ்ந் திலகும் விந்துவிழி
ஆதார மாறுஞ் சுழிமூல சூட்சும மாரறிவார்
சூதான விந்து ரசசூத கற்பச் சுகாதிதங்காண்
நாதாக்கள் போற்று மறுநீ ரமுரி நதியறிந்தே.
📖 பாடல் எண்: (0769) 📖
தினங்கொண் டமுரி திங்களொன் றாகில் திகழமிர்தம்
புனல்வாரி சூழு மதுபான மாறு புகழ்கடிகை
மனங்கொண் டிடுமன்ன போசன முண்டுமதியையுண்டு
கனங்கொண் டிடுங்கற்பஞ் சரமாறியேத்திக்கருதினனே.
📖 பாடல் எண்: (0770) 📖
மறுதிங்கள் மூன்று அதிகாலை யுண்டு மதியமிர்தம்
அறுமூன்றுந்தள்ளி மறுகடிகை சென்றான அளவதின்பின்
நிறுவாக ரத்தி லுணர்வான அன்னை நிமிஷமிராள்
கிருபா கரமது பானத்தி லேறியான்கீர்த்திபெற்றேன்.
📖 பாடல் எண்: (0771) 📖
வருந்திங்கள் நாலு கடிகை யீராறு மதுரரசப்
பெருகும் புஷ்கரணி கடல்சூழ்ந்த வாரிபேரின்பங்காண்
அரும்பொரு ளான அமுரியுண் டேனந்தவேளைதன்னிற்
குருவான போசனங் களிகூர்ந்து மேனிக்கூறுவனே.
வெண்பா
📖 பாடல் எண்: (0772) 📖
பூத்தமலர் வாசம் பொருந்துபரி பூரணத்தில்
வீற்றிருப்ப தஞ்சுதிங்கள் வெண்மதிகாண்-பூத்தமலர்
கடிகை பதினைந்துங் கண்டிதமா யுண்டமுரி
நெடியமல ரன்னமது நேர்.
📖 பாடல் எண்: (0773) 📖
இந்தப்படி யதுமூன் றியல்பால் கடிகைதினம்
அந்தந்த நாள்பிசகா தாறுதிங்கள்- இந்தப்படி
முன்னாழி பின்குறையா மூன்றுகடி கைக்குமேல்
அன்னாளோ ராண்டுமது வுண்.
📖 பாடல் எண்: (0774) 📖
வாலைப்பரு வம்வாதம் வருமுப்ப துக்குள்
காலைரவி கொண்டுஇது காண்கினுமே- வாலை
நாற்பதுக்குள் மேலதிக நற்பொருளை யுண்பவர்கள்
சீலமருள் காலையன்னஞ் செப்பு.
📖 பாடல் எண்: (0775) 📖
பத்துமொரு வஞ்சகம் பதினைந்து மொருபத்துங்
கற்றுணர்வ திவ்வயது காண்கிலார்- பத்தியுடன்
உச்சியொரு வேளை யுணர்வீரா யன்னமது
இச்சையுடன் கொண்டுணர்வ தின்பம்.
விருத்தம்
📖 பாடல் எண்: (0776) 📖
அரிவிந்து மதியமிர்த மதுர வாரி
அவ்வெழுத்தில் பிரணவமா யரவம் பூண்டு
நரியுரியிந் தரித்துசிவ ரூபமாகிக்
கருக்குருவாம் நாதவிந்தின் கருத்தி னாலும்
விரிந்துபல பலவிதமாய் விளங்கு ஞான
வெட்டியரு ளாயிரத்தைந் நூற்றுக் குள்ளே
துரியபொருள் சூக்ஷமெல்லா மாய்ந்து கற்பஞ்
சொல்வன்னி யாண்டை யிந்நூல் சூக்ஷந் தானே.
📖 பாடல் எண்: (0777) 📖
நாதசத்தி பிருதிவியாய் மூலந் தோன்றி
நாதாந்தப் பேரொளியா யுகாரந் தோன்றிப்
பாதமடி சுழிமுனைக்கு ளளவில் லாத
பரப்பிரம சுரூபியதாய்ச் சுகாதீ தத்தில்
மாதாந்தந் தோன்றிநவ நாதத் துள்ளாய்
மண்ணுள்ள தாய்ப்பிரஞ்சவாழ்க்கை போலும்
ஆதாரங் கீழ்மூலச் சத்திக் கூறின்
அளவெல்லாம் யானுரைப்பே னாண்டே கேளீர்.
📖 பாடல் எண்: (0778) 📖
ஓராண்டு அமுரியுண்ணக் காலை மாலை
உச்சியொடு வெகுஉபமா யுட்கொண் டேபின்
மாறாத கனல்வேக மதிக மாச்சு
வன்னியினா லெரியுமிக வளர்ந்து போச்சு
வீறாம லென்னுடலம் வெந்து போச்சு
வேட்கையினால் தேகமெங்கும் வெடித்துப்போச்சு
மீறாது வென்றுமன மிகவும் விம்மி
வேதனைகொண் டேயிருந்த விதிதா னாண்டே.
📖 பாடல் எண்: (0779) 📖
இந்தவித மாயிருந்து கவனங் கொண்டு
இருக்குமந்த வேலைகுரு முனிதான் வந்து
மைந்தனே யென்றழைத்து மகிழ்ந்து முத்தம்
மனதாரக் களிகூர்ந்து வாராய் பிள்ளாய்
சிந்தையுனக் கென்னசிவ ஞானதேசி
ஜெகத்தனிலும் வெகுகோடி காலம் வாழ்வார்
முத்தியுனக் குபதேசந் தந்தேன் தந்தேன்
மூவுலகில் சித்துவிளை யாடு வாயே.
📖 பாடல் எண்: (0780) 📖
கருக்குருவை யரிசிபசும் பயறு மாவின்
கருதிடில்வெண் ணாவின்பசும் பாலுங் கூட்டி
ஒருபோது மன்னஞ்சமைத் துண்ணம் போது
உடன்கூட்டு மமுரியுப்பு உண்டால் மோக்ஷம்
குருவருளை மனதிலெண்ணி ரவியி லன்னங்
கொள்ளுமதி ராத்திரியி லாவின் பால்கொள்
அரும்பொருளை மறவாதே யோராண் டாகில்
அதிகாலை யமுரியுண்டு மதியி லாண்டே.
📖 பாடல் எண்: (0781) 📖
அருளெனும் ரவியிருபத் தஞ்சு நாழி
யானபின் மூலமென்ற புளியி னேர்மை
கருவுருவென் றெடுத்துஅந்தி கருணை மேவிக்
காரமதி லமுரிவிட்டுக் கண்ட மாத்திரம்
திருவுருவா யுண்ணையிலுங் கார சாரம்
செய்விதமா யுபமாகத் தீட்சை யொன்றாம்
மருவுகந்த வாசமல ரன்னந் தண்ணீர்
வசனமது போலமுரி கார முண்ணே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣1️⃣ ஞானவெட்டியான் (782-794) 👈