திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0056) 📖
தில்லையெனு மம்பலமாங் கமல பீடஞ்
சிறந்தவிந்து நாதமதில் செனித்த வாறும்
வல்லவர்கள் போற்றுந்திரு மண்ட பத்தில்
வழிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால்
சொல்லரிய முக்கோண வீடுந் தாண்டிச்
சோதிமதி நடுவணைமுப் பாழுந் தாண்டி
எல்லையெனு மூலமதில் நாத விந்து
இன்பமுட னுதித்தவகை யினிசொல் வேனே.
📖 பாடல் எண்: (0057) 📖
மடைதிறந்து நாதவிந்து வந்த வாறு
மாறியிரு கலைபிரிந்து வளர்ந்த வாறும்
திடமுடனே பதின்மூன்றாம் கோட்டின் மேலுஞ்
செங்கநதி போலவும்வந் துதித்த வாறும்
உடலெடுத்து ஆவியதி லுதித்த வாறு
மூமையென்ற வெழுத்ததனி லியர்ந்த வாறும்
இடைநடுவே யெனைப்பறைய னென்ற வாறு
மென்னுடலே யெடுத்தவகை யினஞ்சொல் வேனே.
📖 பாடல் எண்: (0058) 📖
ஆதியிலே கருவூரு நாட்டுக் குள்ளே
அம்பரமாஞ் சிற்பரத்துப் பெரும்பா ழுள்ளே
வீதியிலே சிறந்தசிவ நாத விந்து
வெளிகடந்து வாயிரத்தெட் டிதழிற் பொங்கி
சோதியிலுஞ் சுழிமுனையாய் தோய்ந்த பின்பு
சுக்கிலமுஞ் சுரோணிதத்தா லெடுத்த பாண்டம்
சாதியிலு மெனைப்பறைய னென்றே சொல்லுஞ்
சண்டாளர்க் கிந்நூலைச் சாற்று வேனே.
📖 பாடல் எண்: (0059) 📖
கால்கரமும் பாதமுத லான வாறுங்
கணுவிரலு நகஞ்சதையுந் தரித்த வாறும்
விலாக்கொடிதா னெலும்புநிணம் வகுத்த வாறு
மிரதமொடு மார்புகழுத் தான வாறுந்
தோலான துடைவயிறு தொக்கின் வாறுந்
தொகுத்தநரம் பதுவுஞ்சடஞ் சூட்டு மாறும்
மாலான மாதர்கருக் குழியிற் சேர்ந்த
வயணமிதை யின்னதென்று வகுப்பே னாண்டே.
📖 பாடல் எண்: (0060) 📖
நாடிநரம் பதுவுதிரம் நயந்த வாறும்
நலமான தசவாய்வுசெனித்த வாறும்
நீடியதோ ரெலும்புகளு நிகழ்ந்த வாறும்
நிலையான கருவியெல்லாந் தனித்த வாறும்
கூடியதோர் குய்யம்வந் துதித்த வாறும்
குறிப்பறிய பஞ்சகர்த்தாள் குடில வாறும்
குடியதோர் மார்புகண்கள் வந்த வாறுஞ்
சொல்லுகிறேன் விபரமினி யாண்டே கேளே.
📖 பாடல் எண்: (0061) 📖
சிறுகுடலுந் தொந்திவயி றான வாறுஞ்
சிறந்தபொறி யதிற்கலந்து நின்ற வாறும்
பெருங்குடலு மொருபுறமாய்ப் பிரிந்த வாறும்
பேர்பெரிய வீரல்குலை சமைந்த வாறும்
மறுமடலா யீரல்நுரை யிரண்டுங் கூடி
வளர்ந்ததுவுஞ் சாதகமாய் மகிழ்ந்த வாறும்
உருவுடனே செவிநாசி யுதடு நாக்கு
வுகமையுட னெடுத்தவகை யுரைப்பே னாண்டே.
தரு
தந்தன தன தனனா- தான தன
தந்தன தன தன – தான தனனா
📖 பாடல் எண்: (0062) 📖
தந்தையுடனேயெனது- தாயுமிருவர்
சரசவுல்லாசலீலை- யாடையிலே
மந்திரமதாகவிந்து- நாதமுங்கூடி
வருகிறவழிசொல்வே னாண்டேயிதுகாண்
இந்திரியசாதிலிங்க முலகுக்கெல்லா
மேகபர நாதவிந்து யாகமதாகி
வந்தவிதங்கோ சபீச- பிரபஞ்சமதாய்
வாய்த்தவிதமுலகில் வகுத்தனர்காண்– தந்
📖 பாடல் எண்: (0063) 📖
ஆவிடையார்கோவிலிலே- யமைத்தகுறி
ஆதரவாகவேசேர்ந்து மாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து- வெகுவிசித
விற்பனையறியவொரு கற்பனைசொல்வேன்
பாவிகளிதையறியார்- கல்லுகள் தனில்
பாவனையொப்பாகவுமே தாவிதஞ்செய்தார்
ஆவியென்றுமறியாமல்- செலவழிய
ஆத்துமலிங்கமதனை பார்த்துணராமல்– தந்
📖 பாடல் எண்: (0064) 📖
வன்னியும்வாயுவுங்கூடி உயர்கின்ற
மண்டபமார்க்கத்தின் வீதிதனிலே
உன்னதமாய் நாதவிந்து- உறவாடியுமே
ஒருவழியாகவந் துதித்ததுகாண்
முன்னிலையாய்ச்சுடரதனில்- மூலவன்னி
முப்பொருளுஞ்சேர்ந்துவொரு வுற்பனமதாய்ச்
சென்னிதனில்வளரியல்பாம்- நாதமெனுஞ்
சித்திரபூஞ்சாவடியில் மத்திபத்திலே– தந்
📖 பாடல் எண்: (0065) 📖
வருகிறவழியதனில்- நவரத்ன
மண்டபத்துக்குள்ள வச்சிரப்பையதனில்
பெருகிய நாதமது- சதாசிவத்தின்
பிரணவமூலப்பிரகாசப் பேரொளியினில்
உருவியமலர்க்கமலம்- போற்றியருள்
உற்பனமருள் தருங் கற்பகத்தில்வாழ்
அருள்வந்தெய்திடினுந் திருவடியதின்
அனுதினம்பூசித்து மிகவடிபணிந்தேன்– தந்
📖 பாடல் எண்: (0066) 📖
போற்றியமண்டலம்விட்டு மறையவர்தன்
புகழுஞ்சிங்காரமெனும் புரவிவிட்டு
சாற்றியமயேஸ்பரத்தில்- சம்பிரமத்துடன்
சத்திரத்தில்வந்து சித்திரசாவடியினில்
காத்திருந்தேன் திருநடனம்- ரத்னமணி
கனகசபையைக்கண்டு நான்மகிழ்ந்தேன்
பூத்தசெங்கமலமலர்- இங்கிதநாதப்
பொக்கிஷத்தைக் கண்டறிந்துயான் மகிழ்ந்தேன் காண்– தந்
📖 பாடல் எண்: (0067) 📖
தெண்டனிட்டுமண்டபம்விட்டுக்- கருவூர்தனில்
சித்திரப்பூஞ்சாவடிதன் முகப்பும்விட்டு
தொண்டர்கள்பணி ருத்திரன்- திருவடியைத்
தொழுதனுதினம்பணிந்து துதித்துநின்றேன்
அண்டர்கள் போற்றுகின்ற- பிரகாசவொளி
அவ்விடத்திலேமனதை யடக்கியேகாண்
கண்டுகளிகூர்ந்துமிக- மதியின்மலர்
கங்கையத்தின் பங்கயக்கண் சிங்காதனத்தில்– தந்
📖 பாடல் எண்: (0068) 📖
நின்றுபதியம்பரம்விட்டு- நிலைபிசகா
நினைவுக்கரியதொரு பொறிகடந்து
வேண்டியவரமருளும்- திருமால்திரு
மெல்லடி பணிந்து பதம்வணங்கியபின்
சென்றுமூலவாசியைக்கொண்டு- இராஜயோகந்
தேவப்பிரகாசமூல கேசரத்தில்யான்
ஒன்றாதவநெறிபிசகா- ரேசிக்கவிருள்
ஓடியே மூலாக்கினி நாடிவணங்க– தந்
📖 பாடல் எண்: (0069) 📖
வணங்கியப்பதிகடந்து- திருநடன
மாடியகூத்தனுஞ் சபையதுகடந்து
இணங்கியபிர்மருத்திரன்- கமலமலர்
இணையடிதொழுதுமே யான்பணிந்தேன்
குணமவரதிசயமா- மென்னாலுரைக்கக்
கூடுமோகோடானுகோடி மேடானமேட்டி
மணம்விசிதமலர்பொழிய- மதிரவியின்
மாமதுரபூபதிகோமயங்காமல்– தந்
📖 பாடல் எண்: (0070) 📖
கொண்டபதிமண்டபம்விட்டுக்- கருவிகளின்
கூடியதிருமுகப்பூஞ் சோலையிலே
அண்டர்களருள்போற்றுங்- கணபதியின்
அடியினருள்துதித்து அடியில்வந்தேன்
குண்டலிகமலமலர்- மேன்மேலவர் தன்
கோபுர சித்திரமதிலின் வாசல்விட்டு
மண்டலஞ்சூழுங்கதிர்- வலமிடைபின்
மலரடிதொழுதுயான் வணங்கிவந்தேன்– தந்
📖 பாடல் எண்: (0071) 📖
வந்துதிருமூலத்திலும்- பானுவிருக்கும்
வச்சிரவளர்சதுஷ்கோண வாசலிலுஞ்
சுந்தரவிந்ததிலும்வந்து- சினேகமது
சோதித்துக்கலந்துற வாடிக்கொண்டே
இந்திரபதவிகளெனவே- என்னாண்டையேகேள்
இங்கிதநாதசங்கித மங்களமதாய்ச்
சந்திரபுட்கரணிவரும்- நந்திப்பிரகாசந்
தாரையதுவேமுழங்குஞ் சாரையைக்கண்டேன்– தந்
📖 பாடல் எண்: (0072) 📖
தூண்டியே நாதபரி- பூரணத்தின்
சுகந்தமலர்க்கமலந் துதித்துக்கொண்டேன்
பூண்டுபொற்பதம் பணிந்தேன்-
என்னாண்டையேகேள்
பூரகத்தினிலும்வந்து போற்றிசெய்தேன்
வேண்டியமதிமலர்கொண்- டாராதனைகள்
மிகுத்தவம்பிகையோமம் விதரணையாய்க்
காண்டிபமென்றாலறிய- வாசியைக்கொண்டு
கருத்திலிருத்திக்கண்ட தாரையூதினேனே– தந்
📖 பாடல் எண்: (0073) 📖
வந்துதச நாதவிந்து- சுழிமுனையின்
வாசலின்கருக்குழிதன் வீட்டுக்குள்ளே
தந்திரமதாகவேதான்- கருவதனில்
சங்கற்பமில்லாமல் கலந்துறைந்ததுகாண்
விந்தையெனு நாதவிந்து- சையோகந்தனில்
விற்பனம்போலவுமெய்து முற்பனமதாய்ச்
சுந்தரசுக்கிலசுரோணித- மிரண்டுங்கூடிச்
சொப்பனம்போலுமுதித்த சூக்ஷமிதுகாண்– தந்
வெண்பா
📖 பாடல் எண்: (0074) 📖
உள்ளொளியாஞ் செந்தணலிலுற்பனமாஞ் சொப்பனத்தில்
வள்ள லெனுநாத விந்துகாண்- தெள்ளியதோர்
கத்தரிக்கோல் மாறல் கனக சபைவீட்டில்
வித்தாய் முளைத்ததுகாண் விந்து.
📖 பாடல் எண்: (0075) 📖
நகாரம காரமுட னாடுசிங் காரமதாய்
வகாரமிரு காலாய் வளர்ந்ததுகாண்- யகாரமது
அஞ்சறி வாய்நின்ற பஞ்சப் பெரும்பூத
மஞ்சும் வளர்ந்ததுகா ணாண்டே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0076) 📖
ஓராறு மேலாறு முற்றபெருந் துறைதாண்டி
சீரார் புகழவருந் தெய்வப் பதிதாண்டிக்
காரார் மதகளிறு கன்னித் திருவீட்டில்
பேராய்க் கருவுதித்துப் பேசி யிருந்தேன்காண்.
📖 பாடல் எண்: (0077) 📖
ஆதிக் கருவூரி லங்கே குடியிருந்து
நீதியந்த நாட்டில்வந்து நெஞ்சறிந்து நேசமதாய்ச்
சாதிகுலந் தவிர்ந்து தலமுஞ்சுழி வீடுவிட்டுச்
சோதிமதி நின்றிலங்குஞ் சுடர்வீட்டில் வந்திருந்தே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0078) 📖
விந்தெனவு நாதம்வந்த வாறுஞ் சொன்னேன்
வெளிகடந்து வந்தவகை விபரஞ் சொன்னேன்
அந்தவிடை பிங்கலையில் மாறல் சொன்னே
னதுகடந்து சுழிமுனையை யறியச் சொன்னேன்
விந்தைமய லாசையது வொழியச் சொன்னேன்
விட்டகுறை தொட்டகுறை விபரஞ் சொன்னேன்
அந்ததிசை யதிசயமு மகற்றச் சொன்னே
னருள்சொன்னேன் பொருள் சொன்னே னறிவுள்ளோர்க்கே.
📖 பாடல் எண்: (0079) 📖
ஓங்கார சத்தமுதித் துணர்ந்து நிற்கு
முன்னியதோர் நகாரமதும் வளர்ந்து நிற்கும்
நீங்காத லகாரமது முயர்ந்து நிற்கு
நிலையான சிகாரமது மேலே நிற்கும்
பாங்கான அகாரமதைக் காத்து நிற்கும்
பதிவான வுகாரமது மேலே நிற்கும்
ஆங்கார மானவஞ்சு பஞ்ச பூத
மப்படியே யஞ்சுருவா யாச்சு தாண்டே.
📖 பாடல் எண்: (0080) 📖
சத்தமது பிருதிவி மேலே நிற்குந்
தாங்கிநின்ற பரிசமது வப்பு மேலாம்
பத்திதரும் ரூபமது சிகார மேலாம்
பாங்கான ரசமதுவும் வகார மேலாம்
சித்தமகிழ்ந் ததுவுமொரு யகார மேலாஞ்
சீர்பெறவே காயமெனுந் திரண்டே யாச்சு
வெற்றிதருங் கவியொரு தொண்ணூற் றாறு
விரைந்துறைந்தே யுதிரமதில் பிறந்த தாண்டே.
📖 பாடல் எண்: (0081) 📖
நட்டுவைத்த வெலும்புகால் துண்டு நாலு
நலமான கையெலும்பு துண்டு நாலு
ஒட்டிவைத்த பழுவெலும்பு முப்பத் திரண்டு
வுன்னதமாந் தண்டுபதி னாறு கண்டம்
நட்டுவைத்த வெலும்புமுச்சா ணதற்கு மேலே
வளமான நுறுக்கெலும்பு வாயி ரந்தான்
சுட்டலைந்த பாண்டமீ தெடுத்த நேர்மை
தொகையெல்லாஞ் சபைதனிலே சொல்வே னாண்டே.
Next Post