திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
நூல் தரு
தந்தனத் தனதனனா- தனனா
தனனா தனதன- தன்னானா
📖 பாடல் எண்: (0046) 📖
உதிரமுந்திரண்டதெங்கே – நாதமதி
லோடியேதான்விந்ததும் பாய்ந்ததெங்கே
மதியொளிரவியுமெங்கே – அமிர்தரச
வாரிதியுமான வரலாறுமெங்கே
சதிரமும்பிறந்ததெங்கே – உலகுதனில்
சாஸ்திரியாசாரிகளே தானுரைப்பீர்காண்
அதிதவேதங்களோதும் – சூரியசந்திரர்
அறிவரிருந்தவர்க ளாண்மையுரைப்பீர்.
📖 பாடல் எண்: (0047) 📖
கருவதுந்தரித்ததெங்கே – சிவசிவ
காயமாயுதித்தவந்தக் கருத்துமெங்கே
அருவுருவானதெங்கே – அண்டபிண்டங்க
ளாதியுமந்தமுங் கூடியமைந்ததெங்கே
உருவடி நடுவுமெங்கே – ஓங்காரமெனும்
உடலுயிரெ டுத்தவிதவுகமையெங்கே
மருவிய நால்வேதஞ்சொலும் – மதிகெட்ட
மாந்தர்களிதையறிந்து வகுத்துரைப்பீர்.
📖 பாடல் எண்: (0048) 📖
தீர்த்தமுமாடிக்கொள்வீர் – தெளிந்தவர்போல்
செபதபசாஸ்திரங்க ளோதிக்கொள்வீர்
யாத்திரைதீர்த்தங்களாடி – நதிகள் தோறும்
அலைந்துஅலைந்துசுற்றி அலைகிறீர்
மாற்றியேபிறப்பமென்று – பொய்ப்பிரட்டு
வாய்சமத்துசாஸ்திரஞ் சொல்மடையர்களே
பாத்திராபாத்திரமறியா – பாவிகள் தான்
பாடுபட்டுங்கூறறியாமாடுகள் தான்.
📖 பாடல் எண்: (0049) 📖
அண்டபிண்டம்பிறந்ததெங்கே – சிவசிவ
அந்தணர்முனிவர்வந் துதித்ததெங்கே
பிண்டம்பலவுயிரும்வந்து – பிறந்தவகை
பிரபந்தமிதையறிந்து பேசுவீர்காண்
மண்டலமும்மண்டலஞ்சூழுங் – கதிர்மதியும்
வன்னியும்பிறந்ததெங்கே வானுமெங்கே
விண்டபொருளண்டருங்காணர் – வேதியர்களே
விஸ்வரூபமறிந்து விளக்குவீரே.
📖 பாடல் எண்: (0050) 📖
சாஸ்திரம்பிறந்ததெங்கே – சிவசிவ
சாதியினால் வகைகளுமானதெங்கே
கோத்திரம்வகுத்ததெங்கே – சிவசிவ
குருவுடன்சீஷனும் வந்துதித்ததெங்கே
போற்றிடுஞ்சற்குருவுமெங்கே – பொய்க்குருவினால்
பூசையனுஷ்டான முறைப்பொருளுமெங்கே
சோற்றிலெய்துங்கல்லறியா – சுணங்கர்களே
சொர்னமலரென்னமய மன்னமலர்காண்.
📖 பாடல் எண்: (0051) 📖
அண்டபிண்டபுவனத்துக்கும் – சந்திரனொளி
ஆதித்தவருருவு மானதெங்கே
சண்டப்பிரசண்டமதாய் – மந்திரமோதுஞ்
சவுங்கலேதானறியாய்ச் சாற்றிடுவீர்காண்
உண்டதோருணவறியார் – உவரசத்தின்
னுப்புவினுவரகற்றி யுண்டுமறியார்
கண்டபொருள்விண்டதறியார் – கல்லுப்புவந்த
காரணத்தைக்கண்டறியாக் கர்மிகளேகேள்.
📖 பாடல் எண்: (0052) 📖
நாதவிந்துதானறிய – சிவசிவ
நடுவனைச்சுடரதுவுந் தாண்டியப்பால்
போதரவாயுடலெடுத்த தத்துவத்தின்
புதுமையைச் சொல்லுகிறேனாண்டேயே கேளீர்
மாதர்கள்சையோனிதனிலும் – விந்துதித்த
மார்க்கமிடவாலெடுத்தவாறறிந்திடீர்
ஏதெனவென்றேவிளங்க – இப்புவிதனி
லிந்திரியமாதவிடா யினமதுகாண்.
விருத்தம்
📖 பாடல் எண்: (0053) 📖
தந்தையுந்தாயுங்கூடி – இருவருஞ்
சருவியேரதிகேளியாடையிலே
விந்தையில்யான்பிறந்த – சரித்திரத்தை
விளம்புவேனாண்டேகேளிந்த மேதினிதனிலும்
உந்தியின்கமலமதி – லுதித்தவித
முற்பனமாகியதோர் கற்பனைசொல்வேன்
சந்தையங்கள் தீர்த்துவிடும் – மாதாபிதாவின்
சங்கைகளறியவிந்நூல் சாக்ஷியிதுகாண்.
📖 பாடல் எண்: (0054) 📖
சோதிமதி சுடரொளியாய்த் தரித்த வாறுஞ்
சுடருருவாய் நாதவிந்து தோன்று மாறும்
நீதியில்லாப் பாழ்வீட்டி னிலைத்த வாறும்
நெல்லியதின் கனியதுபோல் திரண்ட வாறும்
கோதிலாக் கனியெனவே பழுத்த வாறுங்
குழவியெனப் புவிதனிலே பிறந்த வாறும்
ஆதியிலே கருவூரில் குடியி ருந்து
அறிவாலே புவியில்வந் தமைந்தே னாண்டே.
📖 பாடல் எண்: (0055) 📖
தன்னையினி தானறியார் தலமுங் காணார்
தான்பிறந்த சரித்திரமுந் தடமுங் காணார்
இன்னதென்று வேதமறை வழியுங் காணா
ரிடும்பரெல்லாம் வாய்மதத்தா லிகழ்ச்சிசொல்வார்
பின்னையொரு பொருளறியார் தவத்தைக்காணார்
பிதற்றுகின்ற பேயர்கள்தான் பெருமை பேசி
என்னைத்தான் பறையனென்று தள்ளி னார்க
ளென்பிறப்பைச் சபைதனிலே யியம்புவேனே.
Next Post