திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
பிறவித்துன்பம்
(தரு)
பட்டசளமெத்தவுண்டாண்டே- வருகையில்நான்
பட்டசளமெத்தவுண்டாண்டே.
📖 பாடல் எண்: (0441) 📖
இனமாய்த்தனஞ்செயன்வந் தெனையேயுதைத்து சுழி
கனகரத்தினமூலங்கருதிக் காட்டியுதைக்கச்
செனனமிந்தப் படிதான்சிவசொரூபமதாகப்
புனலருவிகள் பாயப் பொறியை விட்டுவரவும்- பட்ட.
📖 பாடல் எண்: (0442) 📖
மனம்புத்தியுமாங்கார மகிழுஞ்சித்தமதனால்
இனமாயெனைப்பிரியா திழுக்கத்தனஞ்செயனால்
சுனையிலருவிபாயுஞ் சுழியிலமிர்தமோட
முனையைவிட்டொளிவீச முகப்பைவிட்டுவரவும்- பட்ட.
📖 பாடல் எண்: (0443) 📖
சாக்கிரஞ்சொப்பனந்தாண்டித் தனியேவெளிப்படையில்
ஆக்கிமத்தனஞ்செயன் வந்ததட்டியுதைத்திடவும்
சீக்கிரமதாகியபிராணன் சீறியேபின் னிட்டுத்தள்ளத்
தூக்கியஅபானவாய்வு தொடர்ந்துதைத்திடும்போது- பட்ட.
📖 பாடல் எண்: (0444) 📖
ஆக்கிரமதாகியகேணி ஆரூர்மண்டபந்தாண்டி
நோக்கியேநான்வரும்போது நொடிக்குள்வாசியுஞ்சீறப்
பார்க்கப்பார்க்கப் பலவும்பரிபூரணவிலாசம்
ஏர்க்கவாசனைவீசி வெளிப்படவும்பிரகாசம்- பட்ட.
📖 பாடல் எண்: (0445) 📖
சுழியின்முனையைவிட்டுத் துரியந்துரியாதீதம்
வழியில்வருமளவில் மாறியேகலைகள்பாய
இழியாக்கேணியில்வீழ்ந்து இருவினைகளுஞ்சூழத்
தொழியாவறுமையில்லாச் சுடரைத்தாண்டிவரவும்- பட்ட.
📖 பாடல் எண்: (0446) 📖
அழியாப்பதவிபெற்று அம்பிகைபொற்கமலத்தில்
கழியாவரம்பெற்றுயான் கருவூர்விட்டுவரவும்
ஒழியாப்பாசவினைக ளொழித்துவோங்காரவாசல்
பொழியமதியமிர்தம் வழியமதுரவின்பம்- பட்ட.
(விருத்தம்)
📖 பாடல் எண்: (0447) 📖
ஒத்துநின்ற பிராணனெனை மேலே நோக்க
ஒருமையினா லபானனது வோங்கித் தள்ள
வெற்றியெனுஞ் சமானனுமே பின்னே தாக்க
மேலான வியானனது மறிக்க முன்னை
சித்தமே யுதானனதுந் திசையை நோக்கத்
திடுக்கிடவே கூர்மனவன் விழிதான் மீட்ட
சத்தியுயர் கண்டவெளி மேலே யேறித்
தனஞ்செயனு முதைத்தென்னைத் தள்ளினானே.
📖 பாடல் எண்: (0448) 📖
தஞ்சமெனு நம்பிநின்ற கருவூர்க் குள்ளே
சதுரகிரி காணவுந்தா னிருந்த வென்னைத்
துஞ்சத்துவ மொடுசோப வினையுண் டாகிச்
சூதுசெய்து நாகனுந்தான் துரோகஞ் செய்தான்
வஞ்சமற வெனைவளர்த்தே தேவ தத்தன்
வருத்தமிகச் செய்துபின்னுந் துரத்தி னான்காண்
கஞ்சமலர்ப் பாதத்தால் கோபித் தேதான்
கருத்துகந்து தனஞ்செயனு முதைத்திட் டானே.
📖 பாடல் எண்: (0449) 📖
இடைகலைபின் னிருகலையு மிழுக்கு முன்னே
யியல்பான சுழிமுனைதா னிழுக்கப் பின்னை
தடமகுட சிங்குவையம் புருடன் ரெண்டுஞ்
சந்திகட்டி மறித்தவர்கள் மாறித் தள்ளத்
திடமுடைய காந்தாரி யத்தி யோடு
தீர்க்கமுள்ள வலம்புருடன் சுழியி லேற
அடவுடைச் சங்குனியுங் குகுதன் தானு
மலமலக்க மூலமதி லழுத்தி னானே.
📖 பாடல் எண்: (0450) 📖
சிட்டர்கள்தா னருகினி லிருக்கும் போது
சிறந்திருந்த நாதவிந் துருவு மாய
வட்டமதில் நானிருந்த திங்கள் பத்தும்
வரிசையுட னேயிருந்து வாழ்ந்த போது
பட்டபா டதிகமெத்த பாடு பட்டேன்
பகர அதைக் கணக்கெழுதி முடியா தாகில்
கட்டமில்லாக் கனகசபை நடனங் கண்டோர்
கருவுடையார் புவியில்வந்து கருதார் தானே.
📖 பாடல் எண்: (0451) 📖
வெற்பான வெளிகடந்து அப்பா லேதான்
வேதமுயிர் நாதவிந் திரண்டுங் கூடி
மயிர்ப்பாலங் கடந்துஅறு கோணந் தாண்டி
வரையெழுந்த மூங்கில்வட்டத் தடியுந் தாண்டி
அப்பாழைக் கடந்துவட்டத் தடிபார்க் குள்ளே
அம்பரத்தின் வெளியில்வந் தமைந்தே னாண்டே
இப்பாரிற் பெரியோர்கள் மனமு கந்து
எந்தனுட வரலாற்றை யியம்பக் கேளீர்.
Next Post