திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
பிண்டோற்பத்தி
( தரு )
தெந்தினதினதினனா- தினதின-
தெந்தினதினதின- தினதினனா.
📖 பாடல் எண்: (0291) 📖
மதிசந்திரன்பதினாறில்- கெர்ப்பந்தரிக்க
வந்தவதரித்தமைந்தன் விந்துபலன்கேள்
பதிகருவூர்தனைவிட்டு- அம்புவியில்
பாலகனவதரித்தால் ஞானியாவார்காண்
மதிரவிநடனஞ்செய்யும் பூர்வக்கியான
வாசிவசமாகும் ரசவாதமுமெய்தும்
அதிவிதயோகதிசைவான்- மறுபிறவியாதலா
லாண்டவன் செயலமைப்பிதுவே- தெந்தின.
📖 பாடல் எண்: (0292) 📖
பாதகஞ்செய்திடுங்கருவூர்- அவ்வூரினில்
பதிக்குள்மைந்த னுதிக்கப்பலனதுகேள்
மூவஞ்சுமதியானால்- அம்மதியில்
முக்குணமதாகி வளர்சகுணவான் காண்
மேவுங்கருவூர்தனிலே- கெர்ப்பந்தரிக்க
மேதினிதனிலேமைந்தன் வீதிவந்தபின்
பூவுலகில்மூவுலகமே- கர்த்தவ்யமெனும்
புகழுடைய மும்மூர்த்தியீஸ்பரன்காண்- தெந்தின.
📖 பாடல் எண்: (0293) 📖
மருவுயர்திருவீட்டில் கருவூரினில்- வந்துதித்து
மைந்தர்களும் வரும்போது
பெருகியமதியீரெட்டில்- உதித்திலகும்
பிரபஞ்முழுந்திரக் கடலுலகுங்
கருவியிலுதித்தபலன்- இப்புவிதனில்
கனயோகச்சித்ததி கர்த்தனிவர்காண்
அருமறையோர்புகழும்- அம்புவிதனில்
அட்டஅவதானியென மனைவர்தொழும்- தெந்தின.
📖 பாடல் எண்: (0294) 📖
இந்துமதிவிந்துநாதமு- மிரண்டுங்கூடி
என்னுடைய தந்தையுடனன்னை சேர்ந்திடில்
மைந்தனாய்க்கருக்குழிதனி- லவதரித்து
வந்துதித்தபாக்கியமினி விந்தையாய்ச் சொல்வேன்
விந்துதிக்கும்விட்டகுறைகாண் இந்தமதி
அந்தணர்முனிவரெல்லாம் வந்துதித்தனர்
செந்தமிழ்க்கவிதையாய்ந்தனர்- ஞானப்புலவ
ரைந்துபூதமைந்துந்தெளிந்தவராண்டே-தெந்தின.
விருத்தம்
📖 பாடல் எண்: (0295) 📖
காரணத்தால் நாதவிந்து கருவூர் தன்னில்
கலந்துவுரு வாகிவந்த கருத்தை யெல்லாம்
சீர்படைத்த புவிதனிலே வகுத்து யானுந்
தெளிவாகத் தெரிந்தமட்டுஞ் செயலாய்ச் சொன்னேன்
வாரணமாஞ் செங்கமல வீட்டுக் கப்பால்
மாறுகலை நாலதுவால் வகுத்த நேர்மை
பேர்படைத்த பதினாறி லொன்று போனால்
பேருலகில் தவசியெனப் பிறப்பா ராண்டே.
📖 பாடல் எண்: (0296) 📖
குருவிருக்கு முப்பாலி லேதான் குய்ய
நடுவுமையத் தின்குறிப்புக் குள்ளி லேதான்
கருவுறையு நாதவிந்து கலக்கும் போது
கதித்தகலை மதியிரண்டு குறைந்த தாகில்
விருப்பமுடன் பார்தனிலே பிறந்த பின்பு
விளங்குஞ்செல்வம் பாதியிலே கழிந்துபோகும்
பருவமுள்ள பதின்மூன்றுங் குறைந்த தாகில்
பரதேசி யாகிடுவார் பாரி லாண்டே.
📖 பாடல் எண்: (0297) 📖
சிறுபிறைக்குள் திரைமறைந்து சிறந்த வீட்டில்
சித்துவித்தை கல்விதரு நாத விந்து
ஒருதுளிகொண் டிருதுளியு லுறையும் போது
வுதித்தகலை நாதனா லாண்டி யாவார்
தருவணையுங் கலையுமைந்த தானாற் கேளீர்
சாந்தநற் குணமழகுஞ் செல்வ மட்டாம்
பெருமையெனு மாறிலுஞ்சன் னாசி யாவார்
பேர்பெரிய யேழினிலு மதிதி யாண்டே.
📖 பாடல் எண்: (0298) 📖
வட்டமதி யெட்டுகலை குறைந்த தாகில்
வகுத்தவுடல் பெருத்திருக்கும் வளர்ச்சி யுண்டாம்
விட்டமதி கலையொன்பதுங் குறைந்த தாகில்
வீறாகப் பிறந்துவளர்ந் திரந்துண் பார்கள்
சட்டமதி கலைபத்தில் குறைந்த தாகில்
சாகுநாள் பரியந்தந் தரித்திர ராவார்
தொட்டகலை நீங்கிவிட திருக்கு மாகில்
தொல்லுலகி லுள்ளவர்க ளறிந்தி டீரே.
📖 பாடல் எண்: (0299) 📖
வடிவுகொண்ட திருமூலத் திரைக்குள் ளேதான்
மருவுகின்ற நாதவிந்து வமைந்த போது
முடிவுகின்ற மதிகுறைந்து பதினொன் றாகில்
முதலான வாழ்வுயுரு மீயா மூடர்
மிடிகொண்டு விருளகற்றி வளர்ந்து மேன்மேல்
மேலான பல்களையு மீரா ராகில்
குடியிருக்குங் குறையில்லா தாச்சு தாகில்
குவலயத்தி னாற்பதிலே சித்த ராண்டே.
📖 பாடல் எண்: (0300) 📖
சிவ்வெழுத்து மவ்வெழுத்து மிரண்டுங் கூடிச்
சிறந்திருந்த அவ்வெழுத்தில் வவ்வுஞ் சேர்ந்து
நவ்வெழுத்தி லுதித்தருளு மைந்தர்க் கெல்லாம்
நயந்துசரி வாழ்த்தின்பின் னிரந்துண் பார்கள்
மவ்வெழுத்து நவ்வெழுத்து மிரண்டுஞ் சேர்ந்து
மகிழும்யவ்விவ் வவ்வெழுத்துஞ் சிவ்வுண்டாகி
இவ்வுலகி லுதித்தருளும் பாலர்க் கெல்லா
மினியசரி பாதிவாழ்ந் திரந்துண் பாரே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0301) 📖
துரியாதீத வீடதனில் சொப்பனத்துக் கப்புறத்தில்
மரியாதெ ழுந்திரண்டு வந்தேக லக்கையிலே
விதியாய்வ ளர்ந்தமதி விண்ணேகி யம்பரத்தில்
பதினால்கு றைந்ததென்றால் பாரதனில் வாழ்வாரே.
📖 பாடல் எண்: (0302) 📖
வாழ்ந்துசமர்த் தாகியபின் வான்புவியி லுள்ளமட்டும்
தாழ்ந்துகுண விங்கிதமாய்ச் சாவுமட்டுந் தாரணியில்
சூழ்ந்துலகத் துள்ளிருந்து துய்யகரு ஆத்துமத்தில்
ஆழ்ந்தமறை நூல்பார்த்து அம்புவியில் வாழ்வாரே.
📖 பாடல் எண்: (0303) 📖
கருவூர் வெளிதனிலே கமலமலர் நாதவிந்து
விருவாந் துருவமதில் மெய்கலந்து நிற்கையிலே
அறிவாக மூவஞ்சு மானமதி தான்குறைந்தால்
குருவுடனே சீஷனுமாய்க் குவலயத்தில் வாழ்வாரே.
📖 பாடல் எண்: (0304) 📖
சத்தியருள் புத்தியதாய்ச் சுகந்ததிரு நாதவிந்து
உத்தெழுந்து ருக்கலத்து வுற்பனங்கொண் டூதையிலே
முத்துளித்தே னிந்தமதி மூவஞ்சு மேசுழித்தால்
பத்திதரு மந்திரமும் பலகலையும் பார்ப்பாரே.
வெண்பா
📖 பாடல் எண்: (0305) 📖
மருவிக்கல வித்தெளியு மாறியுயர் நாதவிந்து
கருவியுற வாகக் கலக்கையிலே- பருவமதாய்
நின்றுவளர்ந் தகலைநேரில் பத்தாறுங் குறைந்தால்
கண்டுகொளுந் தரித்திரவான் காண்.
📖 பாடல் எண்: (0306) 📖
சண்டவெளி தாக்கையிலே தாவித்த நாதவிந்து
அண்டமதைத் தாண்டி யணுகினால்- மண்டலத்தில்
சாவளவு மேவறுமை தரித்திரத்தி லேயழுந்தி
மேகவினை சூழ்ந்திடுங்காண் மேல்.
கலித்துறை
📖 பாடல் எண்: (0307) 📖
கலையே பகுந்த மெய்ஞ்ஞான சோதி கருத்தினுள்ளே
நிலையே கெதியென்று நின்றுகொண்டே நெடுங்காலமெல்லாம்
புலையே நிகழ்த்தி யுமையாம் பிகையிரு பொற்பதத்தில்
மலையே யகற்றிப் பதிமேலு நின்று வணங்கினனே.
📖 பாடல் எண்: (0308) 📖
நூறாகும் பிஞ்சுசுழி முனைவாசல் சிறுவீட் டுக்குள்ளே
மாறாத விந்துவு நாதமுங்கூடி மறுவையிலே
பேறாத நின்று மதிநா லம்பிகை பேசிநின்றால்
ஆறாகி லிங்கமு நாதாந்தயோகி யம்பரமே.
📖 பாடல் எண்: (0309) 📖
குடிகொண்ட மாதர் மாயக் குழிதனிற் கொண்டுமனம்
படிகண்டு நின்று வளர்ந்துகொண் டேன்மது பானத்திலே
அடிகண்டு போற்றி யம்பிகைப் பாத மருள்புரிய
முடிகண்டு நின்று வணங்கியே காக்ஷர மூலத்திலே.
கெர்ப்பக்குறி
விருத்தம்
📖 பாடல் எண்: (0310) 📖
மதுரமது வொருபுறமாய்ச் சேர்ந்த வீட்டில்
மதியமிர்தம் நின்றிலங்கு மூல வீட்டில்
கதிருதைய ஜெகச்சோதி யான பீடங்
கனகரத்ன நாதவிந் திரண்டுங் கூடிச்
சிதறாம லொருமுனையி லுதித்து மேலுஞ்
செடமெடுத்த மார்க்கமினி செப்பக் கேளிர்
பதறாமல் யானருளப் பெரியோர் பாதம்
பணிந்திந்நூல் பெருமை யெல்லாம் பகர்வே னாண்டே.
📖 பாடல் எண்: (0311) 📖
மந்திரமும் சாஸ்திரமும் பிறந்த வீட்டில்
மறைநூலை விதித்தவயன் வாழ்ந்த வீட்டில்
தந்திரமாய்ச் சர்வவுட லெடுத்த வீட்டில்
சதாசிவமு நடனம்புரிந் திருந்த வீட்டில்
சுந்தரஞ்சேர் நாதவிந்து தித்த வீட்டில்
துருத்தியுடற் குள்ளுமொரு வுடலாய் நின்ற
இந்திரன்தன் பதிக்குமே லறைவீட் டுள்ளே
இப்படியே யென்னுடல்தான் சமைந்த தாண்டே.
📖 பாடல் எண்: (0312) 📖
கருவிலுட லெடுத்தவிதக் கருத்துஞ் சொன்னேன்
காரணமாய்ச் கருவிநின்ற கணக்குஞ் சொன்னேன்
மருவியுற வாகிநின்ற மைந்தர்க் கெல்லாம்
வயதுகுறை வாகிநின்ற மார்க்கஞ் சொன்னேன்
பெருகிநின்று கலைகுறையு மிரண்டுஞ் சொன்னேன்
பிறந்துலகில் வாழ்ந்திருந்த பெருமை சொன்னேன்
குருவுடனே சீஷனுற வாகி நின்ற
கூர்மையறிந் தெந்திரத்திற் கூறி னேனே.
📖 பாடல் எண்: (0313) 📖
சித்துவிளை யாடுநவ ரத்ன பீடஞ்
சிறந்தசத்தி வல்லபைதன் னருளினாலே
வித்திருந்த விடமறிந்து வகண்டஞ் சொல்லி
வேதமறி யாதவுடல் வகுப்புஞ் சொல்லிக்
கொத்திருந்து குலைசாயுந் தலமுஞ் சொல்லிக்
குருவான நாதவிந்தின் கூறுஞ் சொல்லி
முத்துதித்த சிறுவீட்டுக் குள்ளே யிந்த
முறைப்படியே கருவியெல்லா முடிந்த தாண்டே.
📖 பாடல் எண்: (0314) 📖
தன்னினைவைத் தானறியு நாத விந்து
தரிசனத்தை யாட்டியது மேலும் பூட்டி
உன்னினதால் யானுமொரு சடல மானேன்
உறுதுணையா னேனுந்த னுந்திக் குள்ளே
என்னினைவை யானறிந்து கருவூர் நாட்டில்
இப்படியே சிறுகுழந்தை யானு மானேன்
முன்னினைவைத் தவிர்த்தாந்த மூலத் துள்ளே
முடிந்தவகை யிவ்விதங்கா ணாச்சு தாண்டே.
📖 பாடல் எண்: (0315) 📖
தாங்கிநின்ற கருவிதுக்குள் யானும் வந்து
தரித்தபின்பு அன்னையென்னைச் சடத்தி லேதான்
பாங்கதுவா வெனைச்சுமந்த ஆத்தா ளுக்குப்
பளபளப்புந் தளதளப்பும் பாரின் மீது
ஓங்கியொரு அடியெடுத்து வைத்த போது
உள்ளமெல்லாம் வேதனையால் நொந்து வாடிச்
சாங்கியமுந் திங்களொரு ஐந்துக் குள்ளே
சாதகமாய் முடிந்தவகை சாற்று வேனே.
📖 பாடல் எண்: (0316) 📖
நடக்கையிலே யிருகாலு மசைவுஞ் சேர்ந்து
நாவிலிந்த வசனத்தை யுரைக்கக் குன்றிப்
படுக்கையிலே யொருபுறமாய்ப் புரண்டு ருண்டு
பத்தாவைக் கண்டவுடன் பார்க்குங் காலை
முடக்கையிலே மேனியெல்லா மூதி வாடி
மெய்க்கரத்தில் கனத்ததொரு மைந்தர் தன்னை
எடுக்கையிலே தள்ளாடி சோப மாகி
யிப்படியே சுமந்திருந்தா ளென்தா யாண்டே.
📖 பாடல் எண்: (0317) 📖
சாந்தமா யெனைச்சுமந்த அன்னை யார்க்குச்
சரீரமதில் வடிவுநிறந் தங்கம் போலாம்
ஆய்ந்தமதி பூரணம்போல் முகமே யாகும்
அழகுமதி யொளிவதுபோல் புருவ மாகும்
தோய்ந்தவிழி நிறமதித குமிழி யாகுஞ்
சொல்லரிய நாசியதும் வசிக ளாகும்
காய்ந்தமலர்க் கொப்பான இதழே யாகுங்
கனத்ததந்தங் கருநாகக் கனிபோ லாண்டே.
📖 பாடல் எண்: (0318) 📖
வரையெழுந்தக் கதிரவன்போல் செருக்க முற்று
வயிரமிட்டி ழைத்தசித்திர மார்பு மாகும்
திரையெடுத்து அலையதுபோற் சிறந்த வுந்தி
செவ்விளநீர்க் கொப்பான கொங்கை ரெண்டும்
துறையடுத்தத் தேளியைப்போல் கணுக்கா லாகுந்
தொந்திவயி றாலிலைபோல் துண்டு காணும்
நிறையடுத்த புத்தகம்போ லொத்த பாதம்
நேராக நானிருந்த பாண்ட மாண்டே.
📖 பாடல் எண்: (0319) 📖
இருந்ததலம் விட்டெழுந் திருக்க அஞ்சி
யென்மனதா லறுசுவையை வாங்க அஞ்சி
சிறந்தருளுந் தெய்வதலம் போக அஞ்சி
ஜென்மவினை தீரநதி முழுக அஞ்சி
பரந்தவயி றினிலிருந்து பாடு பட்டார்
பாலகனாய் வளர்ந்துவிந்தப் பாரில் வந்தேன்
வருந்தியென்னை வளர்த்தெடுத்த அன்னை கெர்ப்பம்
வயிறுதனி லிப்படியே வளர்ந்தே னாண்டே.
📖 பாடல் எண்: (0320) 📖
ஊணில்லை யுறக்கமில்லை யுணர்வு மில்லை
யுறவாகச் செயவிஜய யோக மில்லை
நாளில்லை நகைப்பதில்லை நலந்தானில்லை
நல்லறிவு சற்குணமு நாட்ட மில்லை
வீணில்லை விருப்பமில்லை விகற்ப மில்லை
மெய்தளர்ந்து மேனியுண்ணாய் மெலிந்து அன்னை
ஆணில்லை யென்றுமன நொந்து வாடி
அங்கமதி லிப்படியே யமைந்த தாண்டே.
Next Post